கோயம்புத்தூர்:பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அக்ரகார சாமக்குளம் பகுதியில் உள்ள குளக்கரை சுத்தம் செய்யும் பணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுப்பட்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இன்று ஒரு மணி நேரம் நாட்டின் தூய்மைக்காக மக்கள் அனைவரும் தூய்மைப் பணிகள் செய்ய வேண்டும் என பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார். அதன்படி இங்கு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த குளத்தை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் இன்னும் விவசாயத்தை நாம் எந்த அளவுக்கு மேம்படுத்த வேண்டும் என தெரிகிறது. இந்தக்குளம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பயன்பட கூடிய ஒரு குளம். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பொழுது கிட்டத்தட்ட 96 விழுக்காடு அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பணிகள் முடிவடைந்து இருந்தது. அதன் பின்னர் ஆமை வேகத்தில் பல போராட்டங்கள் செய்து 100 விழுக்காடு திட்டம் நிறைவடைந்து இருப்பதாக திமுக அரசு கூறுகிறது.
ஆனால், இரண்டு மாத காலமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் கசிந்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் விவசாய மக்கள் மீது திமுக எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளது என்பது தெரிகிறது. நம் நாட்டில் 142 கோடி பேர் இருக்கிறோம், இந்த தூய்மைப் பணியில் குழந்தைகளையும் முதியவர்களையும் விட்டுவிட்டால் 100 கோடி பேர் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் பாரதத்தின் தூய்மைக்காக பணியாற்றினால் இந்த நாடு எப்படிப்பட்ட நாடாக மாறும் என்பது நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
இதனை சவுத் ஆப்பிரிக்காவும் நெல்சன் மண்டேலா பிறந்தநாளை முன்னிட்டு பின்பற்றி வருகிறது. இதனை தற்பொழுது இந்தியாவும் முன்னெடுத்துள்ளது தூய்மைப் பணி செய்யும் பொழுது எனக்கு தெரிந்தவரை நம்முள் இருக்கும் ஈகோ-வை கொள்கிறோம்.
நான் என்கின்ற அகந்தை நான் பணக்காரன் ஏழை இந்த வேலையை தான் நான் செய்ய வேண்டும் இதனை செய்யக்கூடாது, ஜாதிகள் என அனைத்தையும் தூய்மை செய்வதன் மூலமாக ‘நாம் செய்யக்கூடிய வேலையை நம் கைகளால் செய்ய வேண்டும்’ என மகாத்மா காந்தி கூறியது போல் செய்தால் சமுதாயத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு தாமாக அழிந்து விடும். இது நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியம்.
பிரதமர் நாம் அனைவரும் இன்று மற்றும் நாளை காதி கடைகளில் ஒரு பொருளையாவது வாங்க வேண்டும் என கூறியிருக்கிறார். எனவே அனைவரும் காதி பொருள்களை இன்று அல்லது நாளையோ வாங்குங்கள். பிரதமர் வந்த பிறகு காதியின் விற்பனை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுங்கள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார், எனவே வரக்கூடிய பண்டிகை காலங்களில் உள்ளூர் சந்தைகளில், பக்கத்து ஊர் அல்லது பக்கத்து மாநிலங்களில் வாங்குங்கள்.
சாலையோர வியாபாரிகளுக்கு மதிப்பளித்து சாலையோர பொருள்களையும் வாங்குங்கள். இனிப்புகளை கூட லோக்கல் கடைகளில் வாங்குங்கள், பிராண்டட் கடைகளில் வாங்காதீர்கள். இதுபோன்ற மிகப் பெரிய முன்னெடுப்பை பிரதமர் கையில் எடுத்துள்ளார். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மிகவும் நன்றாக உள்ளது. இனி நான்காம் தேதி மேட்டுப்பாளையத்தில் மீண்டும் அந்த நடைபயணத்தை தொடங்குகின்றோம். இதில், இளைஞர்கள் மகளிர் குடும்பத் தலைவிகள் என அனைவரும் பங்கேற்கிறார்கள். ஜனவரி மாதம் இந்த நடைபயணம் முடியும் பொழுது பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பெரிய எழுச்சி ஏற்பட்டு இருக்கும்” என்றார்.
தொடர்ந்து, குன்னூர் பகுதியில் ஏற்பட்ட சுற்றுலாப் பேருந்து விபத்து குறித்தான கேள்விக்கு, “நேற்று இன்றைக்கு எல்லாம் அரசுக்கு நாம் தொந்தரவு அளிக்கக்கூடாது அவர்களுடைய வேலைகளை அவர்கள் செய்யட்டும். அரசே துரிதமாக வேலை செய்து வருகிறார்கள். மலைப்பகுதிகளில் வாகனங்களை ஓட்டுவோர் மிகவும் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுகிறேன்” என்றார்.
டெல்லி செல்வதன் அவசியம் என்ன?:தொடர்ந்து பேசிய அவர், “இன்று (அக்.01) நான் டெல்லிக்கு செல்கிறேன். யாத்திரையில் ஒவ்வொன்றை கடக்கும் பொழுதும் தேசிய தலைவர்களுக்கு நடைப்பயணம் எப்படி செல்கிறது என்பது குறித்தான அறிவிப்பை நான் தெரிவித்து வருகிறேன். 3ஆம் தேதி பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. டெல்லி சென்று விட்டு வந்து அதில் பங்கேற்கிறேன். அதனை தொடர்ந்து 4ஆம் தேதியில் இருந்து பாதையாத்திரை மீண்டும் தொடங்குகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏழு மாத காலங்கள் இருக்கின்ற நேரத்தில் அவரவர்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என அனைவரும் எண்ணுவார்கள். பாஜகவும் அதற்கான வேலையை செய்து வருகிறது. இதில், சர்ச்சை எதுவும் இல்லை. கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் தேசிய தலைவர்கள் பேசுவார்கள். ஏனென்றால் ஒரு கருத்திற்கு எதிர் கருத்து கூறினால் அது எங்கே போய் முடியும் என்று தெரியாது. எனவே அது குறித்து நான் பேச அவசியம் இல்லை, நேரம் வரும் பொழுது அது பற்றி பேசலாம்.
தூய்மை செய்வது என்பது அரசு சார்ந்த நிகழ்வு என்பதை சொல்வதை விட பொதுமக்கள் தாமாக முன்வந்து ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மணி நேரம் இதனை செய்ய வேண்டும். தூய்மையான அரசியலின் அடிப்படை அச்சாரம் என்பதை மக்கள் அதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தூய்மையான அரசியல் என்பதை மக்கள் மனதில் விதைக்க வேண்டும் அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தூய்மையான அரசியல் என்பது ஒரு விதை. தற்பொழுது இதனை நாம் பேச ஆரம்பித்து உள்ளோம் முடிந்தவரை அதனை நடைமுறையில் பின்பற்ற பார்க்கிறோம்.