அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு கோயம்புத்தூர்: பாஜக தேசிய தலைவர்களை சந்திக்க டெல்லி செல்வதற்கு முன்பு கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தூய்மை பாரதம் என பிரதமர் சொல்லியதை தமிழக அரசு வேண்டாம் எனக் கூறாமல் தமிழக அரசே இது போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்த வேண்டும். மேலும், வரக்கூடிய பணத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்.
ஸ்வச் பாரத் (switch bharat) பொறுத்தவரை தமிழகத்தில் சும்மா தான் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இத்திட்டத்தை தமிழக அரசு இந்திய அரசு திட்டம் என எடுத்து கொள்ள வேண்டுமே தவிர பாஜக திட்டம் என எடுத்து கொள்ள கூடாது. திமுகவின் சமூக வலைதளம் இருப்பதே பொய்களை பேசுவதற்காக தான். முதலில் டிஆர்பி ராஜா செய்து கொண்டிருந்தார். அமைச்சர் ஆன பிறகு அந்த பணியை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்.
சமூக வலைதளத்தில் திமுக குறித்து பேசியதற்காக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள். பாஜகவினர் கருத்து போட்டாலே திமுக அரசு பயந்து போய் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள். எனவே சமூக வலைதளத்தை பற்றி பேசுவதற்கு தமிழக முதலமைச்சருக்கு எவ்வித அருகதையும் இல்லை.
தேர்தல் கூட்டணி குறித்து என்னிடம் எந்த அறிக்கையையும் கேட்கவில்லை, நானும் கொடுக்கவில்லை. தற்போது பிரேக் உள்ளதால், அடுத்து வரக்கூடிய தலைவர்களின் நேரத்தை வாங்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளதால் தற்போது கட்சியை வலுபடுத்த வேண்டும். எதுவும் பின்னடைவு கிடையாது. அரசியலைப் பொறுத்தவரை சில விசயங்கள் வரப் பிரசாதமாக அமையும்.
2024 தேர்தலில் நான் உறுதியாக இருக்கிறேன். தற்போது 25,000 பேரை தினமும் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதியும் இவ்வளவு மக்களை தற்போது பார்ப்பது கிடையாது. 2024ல் நான் ஒரு நம்பரை சொல்லி இருக்கிறேன் அது வருதா இல்லையா என பாருங்கள். சில இடத்தில் குறி வைத்தால் அது தப்பாது. களத்தில் மக்களின் நிலை தெரிகிறது. மக்கள் எந்த பக்கம் சாய்கிறார்கள் என தெரிகிறது.
பாஜக மாநில தலைவர் இடத்திற்கு போட்டி நடக்கிறதா என்ற கேள்விக்கு, ‘தயவு செய்து போட்டியாக எடுத்து கொள்ளட்டும். மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்று நான் ஏற்கனவே கூறியிருப்பேன். அரசியலில் பதவிக்காக வந்தவன் நான் கிடையாது. இதை விட அதிகமான அதிகாரத்தை பார்த்தவன் நான்.
நான் மோடிக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். மோடி போன்ற ஒரு தலைவர் இந்தியாவிற்கு 100 ஆண்டுகளுக்கு கிடைக்கப் போவது கிடையாது. என்னை பொறுத்தவரை ஒரு கருத்தைக் கூறினால் அதில் உறுதியாக இருப்பேன். என்னை யாருக்காவும் மாற்றி கொள்ள மாட்டேன் எனக்காக வேண்டுமென்றால் சிலர் மாறலாம்’.
சிபிஎம் பொது செயலாளர் பாலகிருஷ்ணனை பொறுத்தவரை அரசவையில் இருக்கும் புலவர் போன்றவர். மன்னை புகழ்ந்து பாடி கொண்டே இருந்தால் பொற்காசுகள் கிடைக்கும். இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை அரசவைப் புலவர்கள் போல் உள்ளது. பாலகிருஷ்ணன் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு கரும்புள்ளி. கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், கொள்கைகளுக்கும் கரும்புள்ளி.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மூன்று, நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்.‘என் மண் என் மக்கள்’ வந்த பிறகு கோவைக்குள் எட்டி பார்க்கிறார். கம்யூனிஸ்ட் என்றாலே இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் தான். இவர்களுக்கு வெட்கம் இருந்தால் மம்தாவுடன் கூட்டணி வைத்து இருப்பார்களா? திமுக அரசைப் புகழ்ந்து பேச வேண்டும் என்பது எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் சாபக்கேடு.
பாஜக தவறான பாதையில் செல்கிறது என தமிழகத்தில் ஊடகங்களோ, அரசியல்வாதிகளோ கூறினால் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை பாஜக கட்சி எடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைவருக்குமே பாஜக மீது கோபமும் வெறுப்பும் உள்ளது தானே. தமிழக பாஜகவிற்கு ஒரே ஒரு தேர்தல் தான் தேவைப்படுகிறது, 25% தாண்டி விட்டோம் என காண்பித்து விட்டால் தமிழக அரசியல் தலைகீழாக மாறும்" என்றார்.
இதையும் படிங்க:"நமது வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்" - மா.செ கூட்டத்தில் திமுக தலைவர் அதிரடி!