வார இதழின் விருதுநகர் மாவட்டச் செய்தியாளர் கார்த்திக் நேற்றிரவு சிவகாசியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகினார். இந்தக் கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்துபோன கார்த்தி சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் ஒருவர் மீதான இந்தக் கொலைவெறி தாக்குதல் சக பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. இதனை எதிர்த்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
அதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்த செய்தி வெளியிட்டதற்காக கார்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல பல்வேறு அமைப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ஆங்காங்கே போராட்டங்களையும் நடத்திவருகின்றனர்.
பத்திரிகையாளர்கள் போராட்டம் அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் முன்பு, பத்திரிகையாளர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கார்த்திக்கை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க:பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல், ஆர்.எஸ். பாரதியின் இழிவான பேச்சு: எழுந்தது கண்டனம்