கோயம்புத்தூர்: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமீப காலமாக பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை நடந்து கொள்ளும் விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அவர், “நான் குரங்கு மாதிரி என்றுதான் சொன்னேன், குரங்கு என்று சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்.
குரங்கு என சொன்னதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, 'தவறு செய்யாதபோது நான் எதற்கு மன்னிப்புக்கேட்க வேண்டும்? மன்னிப்புக்கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது. செய்தியைக் கவர் செய்வதும் செய்யாமல் போவதும் உங்கள் விருப்பம்' என்றார்.
அப்போது ஏன் அழைப்பு விடுக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, 'நான் அழைப்பதில்லையே. அண்ணாமலை தவறு செய்துவிட்டதாக நினைத்தால் என் செய்தியை தவிர்ப்பதற்கான உரிமை உண்டு' எனத் தெரிவித்தார்.
மேலும் பத்திரிகையாளர்களை பார்த்து ஆயிரம், இரண்டாயிரம், மூன்றாயிரம் என சொன்னது குறித்தும் அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர், 'அப்படி பணம் வாங்கும் பத்திரிகையாளரை அம்பலப்படுத்துவேன். அப்படி சொன்னதற்கான காரணத்தை வெளிப்படுத்துவேன்' எனத் தெரிவித்தார்.
'அதை செய்வதில் யாருக்கும் பிரச்னை இல்லை, பணம் வாங்கியவர்களை அம்பலப்படுத்த வேண்டியதுதானே? எல்லோரையும் ஏன் ஒன்றாகப் பேசுகின்றீர்கள்' என அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலையிடம் கேள்வி கேட்டதற்கு பாஜகவினர் எதிர்ப்புத்தெரிவித்து பத்திரிகையாளர்களைத் திட்டினர்.
கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டி இது குறித்தும் அண்ணாமலையிடம் முறையிடப்பட்டது. ஆனால், இவற்றை கண்டு கொள்ளாமல் அண்ணாமலை கடந்து சென்றார். செய்தியாளர் சந்திப்பின்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:பெரியாரின் எழுத்துகள், கருத்துகளுக்கு காப்புரிமை கோரிய வழக்கை திரும்பப்பெற்றார் கி.வீரமணி