கோயம்புத்தூர்:தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோவை மாவட்டம் சார்பில், சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பணிக் காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்குதல், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு நிகழ்ச்சி, கோவை மாவட்ட பணிமனை அளவில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 27 பேருக்கு வாரிசு பணி ஆணை, மருதமலை, சுங்கம் 1, சுங்கம் 2 ஆகிய மூன்று கிளைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை, 50க்கும் மேற்பட்ட பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் மேடைக்கு ஆறு மாத குழந்தையுடன் வந்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவர், தனது குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.
மேலும், கைக்குழந்தையுடன் ஓட்டுநர், அமைச்சரின் காலில் விழுந்த நிகழ்வு மேடையில் இருந்த அனைத்து அரசு அதிகாரிகள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. மேலும் அமைச்சர், தனது பிரச்னை குறித்து பேசி தீர்வு காணப்படும் என தெரிவித்ததாகவும் கண்ணன் கூறினார்.