நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கும் நிகழ்வை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அந்த வகையில் கோவையில் Rozgar Mela திட்டத்தின் மூலம் 91 இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு, வருமானவரித்துறை, தபால் துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் துறைகளில் பணி ஆணை பெறும் 91 பேருக்கு நேரடியாக பணி நியமன ஆணையை வழங்கினார்.
அப்போது பேசிய நாராயணசாமி, பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அதிக முக்கியத்துவம் செலுத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக Rozgar Mela எனும் வேலைவாய்ப்பு விழாவை தொடங்கினார். இதற்கு முன்பு தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, பிஎல்ஐ, திறன் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
அந்த வகையில் Rozgar Mela திட்டமும் வேலை வாய்ப்புகளை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வைத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி 75 ஆயிரம் பணி நியமன ஆணைகளை வழங்கி இந்நிகழ்ச்சியினை பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் ஒரு வருடத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்பு வழங்குவது இலக்காக கொண்டுள்ளது.