கோயம்புத்தூர்: காந்திபுரம் 100 அடி சாலையில் பிரபல தங்க நகை கடையான ஜோஸ் ஆலுக்காஸ் செயல்பட்டு வருகிறது. கடையை நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் மூடி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று (நவ.28) காலை கடையை திறந்து பார்த்தபோது நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனைக்கண்ட ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 150 முதல் 200 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என போலீசாரால் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அதன்பின், மாநகர காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “காட்டூர் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நள்ளிரவு நேரத்தில் ஒரு நபர் கடையினுள் புகுந்து கடைக்குள் ஆங்காங்கே மட்டும் நகைகளை எடுத்து உள்ளார். பின்னர் வந்த வழியாகவே சென்றுள்ளார்.
பின்னர், காலையில் கடையை திறந்து பார்த்தபோது கடை ஊழியர்கள் நகை திருடு போய் இருப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். கடையினுள் 12 நபர்கள் தங்கி உள்ள நிலையில் யாரும் திருட வந்தவர்களைப் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.