கோயம்புத்தூர்:இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் ஜூலை 9ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கோவை மத்திய சிறையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 37 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் ஜூலை 9ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.
மேலும், கோவை மத்திய சிறையில் நீண்ட ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். மேலும்,கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
மேலும் 'நேற்று பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக 16 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டமானது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஆரம்பிக்கப்பட்ட அடித்தளத்தின் நோக்கமாகும்.
மேலும், வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.