கோவை:துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த மூன்று நாட்களாக நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உருக்குலைந்த துருக்கி மற்றும் சிரியா.. கோவையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை இந்த சம்பவம் உலகம் முழுவதும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர். குறிப்பாக, இந்தியா சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தெற்கு மண்டலம் சார்பில் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டி இன்று (பிப்.10) மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கோவை தெற்கு மண்டல தலைவர் சையது அபுதாஹிர் தலைமையில் கரும்புக்கடை பகுதியில் மஸ்ஜிதுல் ஹூதா, மற்றும் இஹ்சான் பள்ளிவாசல் முன்பு PRAY for TURKEY and SYRIA என்ற விழிப்புணர்வு கோரிக்கை பதாகைகளை ஏந்தி பொது மக்களிடையே கேட்டுக்கொண்டனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் ஜாமத் பள்ளிவாசலில் தொழுகைக்கு பின்னர் தலைமையர் இமாம் மெளலவி ஜலாலுதீன் தலைமையில் துருக்கி மற்றும் சிரியா மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 21 ஆயிரத்தை தாண்டும் பலி எண்ணிக்கை