கோயம்புத்தூர்: இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான பூஜைகள் செய்யப்பட்டு சதுர்த்திவிழா கொண்டாடப்படுகின்றது. அதன்படி இந்த ஆண்டு வருகின்ற 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.
இருப்பினும் தற்போது கரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனிநபர் வழிபாட்டுக்குத் தடைவிதிக்கப்படவில்லை.
ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொலி
இந்நிலையில் விநாயகர் சிலை தயாரிப்பு குறித்து ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில், “விநாயகர் இந்தியாவில் இருக்கும் கடவுள்களில் மிகவும் அழகானவர். அவருடைய அன்பான தன்மையாலும், குணத்தாலும், அவர் உலகம் முழுவதும் வணங்கப்படுகிறார். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
பண்டிகை சமயத்தில், நாம் வணங்கும் விநாயகர் சிலைகளை மண், சிறுதானியம், மஞ்சள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும். நெகிழிப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கும் சிலைகளை நீரில் கரைக்க முடியாது.