கோயம்புத்தூர்: இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் திவீரமாக நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசும், மத்திய அரசுடன் இணைந்து தமிழர்களை அழைத்து வருகிறது.
அதன்படி இன்று கோவை விமான நிலையத்திற்கு 4 பேர் அழைத்து வரப்பட்ட நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், ‘இஸ்ரேலில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு 132 பேர் அழைத்து வரப்பட்டு உள்ளார்கள். இன்று 4 பேர் வந்தடைந்துள்ள நிலையில், கோவை விமான நிலையத்திற்கு மட்டும் மொத்தம் 25 பேர் வந்து உள்ளார்கள்.
மேலும், இஸ்ரேலில் இருந்து தொடர்பு கொள்பவர்களை அழைத்து வந்து, அவர்கள் இல்லம் வரை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சிலரை நாங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். பிற நாட்டவர்கள் எங்களுடன் இருந்து, அவர்களின் நாட்டிற்கு செல்லும் பொழுது எங்களுக்கும் அச்சம் ஏற்படுவதாகவும் தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறோம் என தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசின் சார்பில் 120 பேருக்கு விமானக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 12 பேர் சொந்த செலவில் திரும்பி உள்ளனர். மேலும், அங்கு இருப்பவர்களின் விருப்பத்தின் அடிப்படையில்தான் நாம் அழைப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளதாக” அமைச்சர் கூறினார்.