கோயம்புத்தூர்: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர், ஆசிப் முஸ்தஹீன் (30). இவர் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஈரோடு போலீசார் அவரை ஊபா (Unlawful Activities (Prevention) Act) சட்டத்தில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் கோவை மத்திய சிறை ஜெயிலர், கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஆசிப் முஸ்தஹீன் அறையினை சோதனையிட்டபோது, அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரை கைப்பற்றி உள்ளார். அதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியினை வரைந்து வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஜெயிலர் அந்த பேப்பரை கைப்பற்றியதுடன், சிறை குறிப்பேடுகளில் இது குறித்து பதிவும் செய்துள்ளார். மேலும், இது குறித்து முஸ்தஹீனிடம் கேட்டபோது, நீதிமன்றத்திற்கு மனுக்களை எழுதுவதற்காக கொடுக்கப்பட்ட பேப்பரில் ISIS அமைப்பின் கொடிகளை வரைந்து இருப்பதும், இது இஸ்லாமிய அரசின் கொடி, இந்த கொடியை வைத்திருப்பதில் தவறில்லை என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.