கோயம்புத்தூர்: ஈஷா யோகா மையம் சார்பில் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை வெளிக் கொண்டு வரும் வகையில் ஆண்டுதோறும் ஈஷா கிராமோத்வசம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டும் 15வது கிராமோத்சவம் போட்டிகள் கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தன. 5 மாநிலங்களில் நடந்து வந்த இந்த போட்டிகளில் 60 ஆயிரத்து 132 வீரர்கள் பங்கேற்றனர். இதன் நிறைவுவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் பங்கேற்றார்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, நடிகர் சந்தானம் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி என இரு பிரிவிலும் ஈரோடு அணி வெற்றிபெற்றது. வாலிபால் போட்டியில் சேலம் உத்தமசோழபுரம் அணி வெற்றி பெற்றது. த்ரோபால் போட்டியில் கோவை அணி வென்றது.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், "ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை 2004ஆம் ஆண்டு முதல் ஈஷா நடத்தி வருகிறது. இன்று நடக்கும் 15வது கிராமோத்சவ விழாவில் நான் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் முழு நேர, தொழில்முறை விளையாட்டு வீரர்கள் கிடையாது தினக்கூலி வேலைக்கு செல்பர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் என பல விதமான வேலை செய்பவர்கள் தான் இப்போட்டியில் வீரர்களாக களம் கண்டு வென்றுள்ளனர். இது தான் இத்திருவிழாவின் சிறப்பு.
விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி இங்கு 1,200 பேர் ஒன்று சேர்ந்து கும்மியாட்டத்தையும் ஆடி காட்டியுள்ளனர். இது தவிர பல்வேறு கிராமிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இத்திருவிழாவில் நடத்தப்பட்டுள்ளது. இதைக்காண ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துள்ளீர்கள். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ள சத்குரு, வாழ்க்கையையே ஒரு விளையாட்டு தன்மையுடன் அணுக கூடிய கூல் குருவாக இருக்கிறார்.
விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைகளை வளர்க்கும் வித்தை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். இந்தாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், யோகா, கேலரி, மல்லர்கம்பம் உள்ளிட்ட 5 பாரம்பரிய கலைகளை கேலோ இந்தியா திட்டத்தில் சேர்த்துள்ளோம்.