ஈஷா யோகா மையம் சார்பில் ஜனவரி 16ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை மாட்டு பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஈஷாவில் வளர்க்கப்படும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய நாட்டு மாடுகளின் கண்காட்சி ஜனவரி 15ஆம் தேதி முதல்17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதுதவிர, 16ஆம் தேதி மலைவாழ் மற்றும் கிராமப்புற மக்கள், வெளிநாட்டினர் உட்பட பலரும் இணைந்து பொங்கல் வைக்க உள்ளனர்.
இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வெளியிட்டுள்ள வீடியோவில், "அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கல் விழா என்பது உழவர் திருநாள். நம்முடைய தமிழ் கலாசாரமானது, மண்ணுடன் செய்து உணவு தயாரித்து முழுமையாக வாழும் கலாசாரம். இதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. குறிப்பாக, நகரங்களில் இருப்பவர்கள் இதை ஞாபகத்தில் வைத்து கொள்ளவேண்டும்.
மாட்டுப் பொங்கல் அன்று சினிமா தியேட்டருக்கும், ரெஸ்டாரண்டுக்கும் செல்வதற்கு பதில், அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று மக்களுடன் பொங்கலை கொண்டாடுங்கள். குறிப்பாக, இளைஞர்கள் கிராமங்களுக்குச் சென்று அங்கு நடக்கும் கொண்டாட்டங்களில் பங்கெடுக்கவேண்டும். கிராமங்களுக்கு செல்ல முடியாவிட்டால், குறைந்தபட்சம், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியையாவது உடுத்திக்கொள்ளுங்கள்.