கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக மகளிர் அணி சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் மத்தியில் உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வானதி சீனிவாசன், ''பாஜக மகளிரணி சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுதானிய ஆண்டை கொண்டாடும் வகையில், விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் சிறுதானிய பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்திக் கொண்டிருக்கிறது. கர்நாடகா சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சிக்கு இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
பிரதமர் மோடி எதிர்ப்பை மட்டும் கவனத்தில் கொண்டு, சுயநல அரசியலுக்காக விவசாயிகள் நலனை, மாநிலத்தின் உரிமையை முதலமைச்சர் காவு கொடுக்கிறார். காவிரி நதிநீர் பிரச்னை உயிர் நாடி பிரச்னையாக இருக்கிறது. இப்பிரச்னையில் தமிழ்நாடு உரிமை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடுநிலை வகித்த காரணத்தினால் தான் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் கால தாமதம் இல்லாமல் மேட்டூர் அணை திறக்கச்செய்த பெருமை பாஜக, மோடியையே சாரும். இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் பொதுவான நியாயமான வழியில் பாஜக நிற்கிறது. மேகதாது அணை கட்ட வேண்டுமென கர்நாடக பாஜக அரசு சொன்ன போது கூட, நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென மத்திய பாஜக அரசு தமிழக விவசாயிகள் நியாயத்தின் பக்கம் நின்றது.
கருணாநிதி காலத்தில் காவிரி பிரச்னையில் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்தீர்கள். அதனால் புதிய அணைகள் வந்ததால் தான் பிரச்சனைகள் வந்தது. அப்பிரச்சனைகளுக்குத் தீர்வை தந்தவர் பிரதமர் மோடி. மக்கள் நலனை விட, காவிரி நீராதார உரிமை தாண்டி, விவசாயிகள் நலன் தாண்டி, மாநிலத்தின் உரிமையை விட மோடி எதிர்ப்பு அரசியல் தான் முதலமைச்சருக்கு முக்கியமாக உள்ளது.
திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எந்த காலத்தில் நடந்தது? நீதிமன்ற உத்தரவினால் துறைகள் நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதா? இது தான் சட்டத்திற்கு கொடுக்கும் மரியாதையா? விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டுத்தனமாக பேசுகிறார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.