கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயகுமார் கடந்த ஜூலை 7ஆம் தேதி முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் விஜயகுமார் தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது உறவினர்கள், அவர் சிகிச்சை பெற்ற மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டிஐஜி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில் டி.ஐ.ஜி தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு ராமநாதபுரம் போலீசார் சம்மன் அனுப்பி அவர்களை நேரில் ஆஜராகுமாறு தெரிவித்திருந்தனர்.
அதில் இந்திய மக்கள் மன்றம் நிர்வாகி வாராகி மற்றும் பேசு தமிழா பேசு ராஜவேல் நாகராஜ் ஆகிய இருவரை இன்று விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில் இன்று ஆஜராகினர். உதவி ஆணையர் கரிகாலன் தலைமையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. அவர்களிடம் டிஐஜி தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துகள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. யார் அதனை தெரிவித்தது உள்பட 42 கேள்விகளுக்கு மேல் கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:"செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில் 13 அமைச்சர்கள்" - கே.பி.ராமலிங்கம் விடுத்த வார்னிங்!
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய வாராகி, “டிஐஜி விஜயகுமார், ஐஜி சுதாகர் மற்றும் ஏடிஜிபி அருண் பற்றி என்னிடம் தெரிவித்ததை விசாரணை அதிகாரிகளிடம் நான் தெரிவித்துள்ளேன். அது குறித்து ஆவணங்கள் கேட்டுள்ளனர். அதை தயார் செய்து ஒப்படைக்க நேரம் கேட்டுள்ளேன்.
டிஐஜி கடந்த காலகட்டத்தில் என்னிடத்தில் பேசியதை விசாரணையில் தெரிவித்துள்ளேன். விஜயகுமார் இறப்புக்கு முன்பு என்ன சொன்னாரோ அதைத்தான் நான் வீடியோவில் சொல்லி உள்ளேன். இதில் எனக்கு எந்த வித காழ்ப்புணர்ச்சி ஒன்றும் இல்லை. மறைந்த விஜயகுமார் ஒரு சமூக சிந்தனையாளர்” எனக் கூறினார்
மேலும் பேசிய அவர் “என்னிடம் விசாரித்ததை ஆறு பேர் நோட்ஸ் எடுத்து வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த காவல்துறை மீது தனக்கு சந்தேகம் உள்ளதால் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டுள்ளேன். ஏடிஜிபி அருண் ஏற்கனவே அனைத்தையும் முடிவு செய்து கொண்டு வந்து பேசினார். மாநில அளவிலான காவல்துறையினரை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நான் யார் மீது குற்றம் சாட்டுகிறேனோ அந்த அதிகாரியின் கீழ் உள்ளவர் என்னை விசாரிக்கிறார்கள். அப்படியென்றால் எப்படி உண்மை வெளிவரும். மனநிலை பாதித்து தான் டிஐஜி தற்கொலை செய்துள்ளார் என ஏற்கனவே முடிவு செய்து கொண்டு விசாரணை மேற்கொள்கின்றனர்.இது குறித்து நான் எந்த ஆவணமும் மறைக்க விரும்பவில்லை. என்னிடம் இன்னும் மூன்று ஆவணங்கள் உள்ளது. அதையும் தரவுள்ளேன். அதற்கு அவகாசம் கேட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோயில் சொத்துகள் மீட்கப்பட வேண்டும்: இந்து அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!