கோயம்புத்தூர்:கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி (Smart City) திட்டத்தின் கீழ் சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் ஆகிய 8 குளங்களை புனரமைத்து மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு ஏற்ற வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக குளக்கரைகளில் நடை பாதைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பூங்கா, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல மக்கள் அதிகம் கூடும் பந்தய சாலை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் மாதிரி சாலைகளை அமைப்பதோடு, மக்களை கவரும் வகையில் பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், உக்கடம் குளக்கரையில் அமைக்கப்பட்ட ‘ஐ லவ் கோவை’ (I Love Kovai) செல்பி பாயிண்ட், பந்தய சாலை பகுதியில் உள்ள பிரம்மாண்ட மீடியா டவர் (Media Tower), குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டு வரும் தமிழ் எழுத்துக்களால் 20 அடி உயரத்தில் செய்யப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை, ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள கிளாக் டவர் (Clock Tower), தேவதை செல்பி ஸ்பாட் உள்ளிட்டவை கோவையின் புதிய அடையாளங்களாக மாறி வருகின்றன.