கோயம்புத்தூர்:சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது. மதுரையில் நடைபெற்ற தடகளப் போட்டி அது. லாரி ஓட்டுநரின் மகளான அந்த பெண், வாழ்வின் சவால்களை ஓடிக் கடந்து விடும் நோக்குடன் களத்தில் தயாராக இருந்தார். சிக்னல் கிடைத்து ஓடத் துவங்கிய அவருக்கு கால்கள் ஒத்துழைத்த அளவுக்கு காலில் இருந்த ஷூக்கள் ஒத்துழைக்கவில்லை. பாதி தூரம் கடந்து இருந்த நிலையில் ஏற்கெனவே கிழிந்த நிலையில் இருந்த அந்த ஷூக்கள் முழுவதுமாக கிழிந்து கால்களை பதம் பார்த்தன.
ரத்தம் சொட்ட சொட்ட ஓடி அந்த போட்டியில் தங்கம் வென்றார் வித்யா ராமராஜன். சில ஆண்டுகள் கழித்து அதே கால்களால் தடைகளைத் தாண்டி இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷாவின் 39 ஆண்டு சாதனையை முறியடித்து இருக்கிறார் வித்யா ராமராஜன். மதுரை போட்டி முதல் சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டியை தொடுவது வரை அனைத்து சாதனைகளுமே இவருக்கு சாதாரணமாக வாய்த்துவிடவில்லை. ஆசிய போட்டிகளில் இரட்டை சகோதாரிகளான தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யா மற்றும் வித்யா பங்கேற்றுள்ளனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில், தோட்டத்தின் நடுவே தற்போதுதான் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றில் வசிக்கும் வித்யா மற்றும் நித்யாவின் பெற்றோரை சந்தித்தோம். பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசுப்பணி கிடைத்தாலும் அவங்க செலவுகள சமாளிக்குறதே சிரமம்தான். ஷூ வாங்கவே 25 ஆயிரம் ரூபா தேவைப்படும். இந்த ஷூ ஒரு மாசம் தான் தாங்கும். இதுபோக விமான பயண செலவு எல்லாமே சொந்த செலவுல தான் சமாளிச்சோம் என்கிறார் வித்யா மற்றும் நித்யாவின் தாயாரான மீனா.
இப்போது ஆசிய விளையாட்டுகளில் அரசின் உதவி கிடைப்பதால் செலவுகளை சமாளிக்க முடிவதாக கூறும் மீனா, தற்போதுதான் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறியிருப்பதாக தெரிவித்தார். ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில், கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கோவையைச் சேர்ந்த வித்யா மற்றும் நித்யா இருவருக்கும் தடகள போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது.
இதில் தொடர் ஓட்டத்தில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற வித்யா, 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தையும் வென்று அசத்தி உள்ளார். அதே போட்டியில் வித்யாவின் சகோதரியான நித்தியா நான்காவதாக வந்து பதக்கம் பெறும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார்.
யார் இந்த சகோதரிகள்... ஆசிய விளையாட்டில் இவர்களின் சாதனை என்ன...?:பெண் பிள்ளைகளை பெற்றதாலோ என்னவோ ஊராரிடமும் சொந்தக்காரர்களிடமும் அவர்களின் கனவை நனவாக்குவதற்கு போராடியுள்ளனர் வித்யா, நித்யாவின் பெற்றோர். லாரி ஓட்டுநராக பணியாற்றிக் கொண்டே தன் மகள்களின் கனவையும் சுமந்துள்ளார் ராம்ராஜ்.
மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், தனது இரட்டை பெண் குழந்தைகளான வித்யா மற்றும் நித்தியா சிறு வயது முதலே தடகளப் போட்டிகளில் ஆர்வம் செலுத்தி வந்ததைக் கண்டு, இருவருக்கும் முறையாக பயிற்சி பெற ஏற்பாடு செய்து உள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் போது உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பரிசுகளை வென்று உள்ளனர் வித்யா மற்றும் நித்யா.
"அடிப்படையில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் அன்றாட செலவுகளுக்கே சிரமப்பட்டு வந்தோம். மூவரும் பெண் குழந்தைகள் என்பதால் என்ன செய்யப் போகிறார்களோ என அக்கம்பக்கத்தினர் காதுபடவே பேசினார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது, எங்களது மகள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் கலந்து கொண்டு, இருவரும் வெற்றி பெற்று வந்தனர். இயற்கையிலேயே அவர்களுக்கு தடகளப் போட்டிகளில் ஆர்வம் இருப்பதை உணர்ந்தோம். விளையாட்டு தான் எதிர்காலம் என்று முடிவு செய்தபோது, அவர்களின் விருப்பத்துக்கு தடை சொல்லாமல் ஊக்கப்படுத்தும் வேலையை மட்டும் செய்தோம்.