ஆய்வாளர் மோகன்ராஜ் பேட்டி கோயம்புத்தூர்:திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009-ஆம் ஆண்டில் ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் 910 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம், (டான்பிட்), குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த 2022 ஆகஸ்ட் 26-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களைக் காப்பாற்றுவதற்காக, ரூ.2.50 கோடியை லஞ்சமாக பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் ஆகியோர் மீது சிபிஐ தனியாக வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் ஆஜராகியுள்ள குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் மோகன்ராஜ் பேசுகையில், “இந்த வழக்கின் விசாரணையின்போது பணியில் இருந்த 2 ஆய்வாளர்கள், அப்போது இருந்த ஏடிஜிபி சொன்னதாக கூறி, அவர்களுக்கு உறவினர்களின் பணத்தை வாங்கித் தர கூறினார்கள். இது குறித்து சிபிஐயிடம் தெரிவித்தும், என்னை மிரட்டி தவறான வாக்குமூலம் தர வற்புறுத்தினார்கள்.
நான் நியாயமாக பணியாற்றினேன். அதிகாரி செய்த தவறுக்கு நான் சிக்கியுள்ளேன். மேலும், சிபிஐ பதிவு செய்துள்ள இந்த வழக்கு தவறான வழக்கு. தவறு செய்தவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் தப்பி விட்டார்கள். நாங்கள் சட்டத்தை நம்புகிறோம், நீதிமன்றத்தை நம்புகிறோம். நிச்சயமாக வழக்கில் நாங்கள் நிரபராதி என்பது தெரியும். அப்போதைய மேற்கு மண்டல ஐஜி மற்றும் திருப்பூர் எஸ்.பிக்கும் இடையே இருந்த அதிகாரப்போட்டி உண்மைதான்.
46 வயதில் ஆய்வாளராக இருந்து டிஎஸ்பி ஆகும் சூழ்நிலையில், பணியிடை நீக்க ஆணையை கொடுத்துள்ளார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? ஆரம்பத்தில் சிபிசிஐடி விசாரணையின்போது மேல் அதிகாரிகள் உத்தரவு எனக் கூறி, எனது குழந்தைகள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று மிரட்டினர். காவல் துறையில் பணியாற்றியதற்கு நான் வெட்கப்படுகிறேன்.
புகார் அளித்தவர்களுக்குப் பணத்தை வாங்கி கொடுத்தேன். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றபோது, பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் மனு அளித்திருந்தார். அப்போது அதை உதவி ஆய்வாளர் ஒருவர் வாங்கியிருந்தார், எனக்கு தெரியாது. மீண்டும் அந்த நபர் ஒரு மாதம் கழித்து பணத்தைப் பெற்றுத் தருமாறு கூறினார். ஆனால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. உடனடியாக எனக்கு சார்ஜ் மெமோ வழங்கினார்கள்.
இது குறித்து எஸ்.பியிடம் கேட்டபோது, ஐஜி கூறிவிட்டார் நான் என்ன செய்ய முடியும் என கூறுகிறார். ஐஜி கூறினால் தலையை வெட்டி விடுவார்களா? இப்படிதான் காவல் துறையில் பணியாற்றியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை வாங்கி கொடுத்ததற்கு சார்ஜ் மெமோ கொடுத்து ஒரு ஆண்டுக்கு ஊதியத்தை நிறுத்தி விட்டார்கள். இதன் பிறகு எப்படி காவல் துறையில் நான் பணியாற்ற முடியும்?” என கூறினார்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் திருப்பதி லட்டு, லுங்கிக்கு கெடுபிடி.. சுங்கத்துறையினரின் கட்டுப்பாடுகளால் பயணிகள் அதிருப்தி!