கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகம், சின்னாம்பதி அருகே வாளையாறு ஆற்றில் நீர் அருந்த வந்த 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மீது கடந்த திங்கள்கிழமை அதிகாலை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், அதன் தலை, இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த யானையை சாடிவயல் கும்கி யானைகள் முகாமுக்கு கொண்டுசென்று, வனத்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று (மார்ச்.17) சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில் திடீரென இரவு 10.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி யானை உயிரிழந்தது.
ரயிலில் அடிபட்ட யானைக்கு சிகிச்சை இதனை கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்ததாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
"காயம்பட்ட யானையைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் யானை உயிரிழந்தது அதிர்ச்சி அளித்துள்ளது. மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்லக்கூடிய ரயில் பாதையில் ரயில்களை மெதுவாக இயக்கக்கோரி ரயில்வே துறைக்கு மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதி வழியாக மெதுவாக ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், இன்று (மார்ச்.18) காலை வனத்துறை மருத்துவர் குழு இறந்த யானையின் உடலை உடற்கூராய்வு செய்ய உள்ளதாகவும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திரைப்பட பாணியில் தங்க மாத்திரைகள் கடத்தி வந்த நபர் கைது