கோயம்புத்தூர்:மேட்டுப்பாளையம் பகுதியில் ஊருக்குள் சுற்றி வந்த பாகுபலி யானை நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறியும் போது வாயில் ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறியுள்ளது. இதனை பார்த்த வனத்துறை ஊழியர்கள், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வாயில் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி யானைக்கு முதலுதவி வழங்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக காட்டுக்குள் சென்ற யானையை தேடி வருகின்றனர்.
நேற்று ஜக்கனாரி வனப்பகுதிக்குள் தென்பட்ட பாகுபலி யானை, தற்போது கல்லாறு வனப்பகுதியில் சுற்றி வருகிறது. முதுலுதவி வழங்க பாகுபலி யானையை சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானையின் இந்த காயத்திற்கு காரணம் என விசாரணை மேற்கொண்ட போது, வனப்பகுதிக்குள் மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடியை கடித்ததால் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அதே சமயம் மற்றொரு ஆண் யானையுடன் பாகுபலி சண்டையிட்டு இருந்தாலும், இது போன்ற காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கருதுகின்றனர். எனினும் யானையை மிக அருகில் பார்த்தால் மட்டுமே அதன் காயத்தன்மை தெரிய வரும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகுபலி யானை இருந்த நெல்லி மலை வனப்பகுதியில் போளுவாம்பட்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்கள் பைரவன், வளவனின் உதவியால் அவுட்டுக்காய் உள்ளிட்ட வெடி பொருட்கள் ஏதேனும் வனப்பகுதிக்குள் உள்ளதா என்ற சோதனையிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இரண்டாவது நாளாக வனத்துறையினர் பாகுபலி யானையை தேடி வந்த நிலையில், தற்போது கல்லாறு வனப்பகுதியில் பாகுபலி யானை உள்ளதால் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர் சரியான இடத்திற்கு வந்தால் அந்த யானைக்கு வனத்துறை மருத்துவர் மூலம் மயக்க ஊசி செலுத்தி அதன் காயத்தை கண்டறியவும், கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதுமலையில் இருந்து விஜய் மற்றும் வசிம் ஆகிய இரு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டுள்ளது.