கோவை :அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர உணவகத்தில் இந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பு, கொங்கு கிலோபல் போரம் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற தொழில்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை விமான நிலைய விரிவாக்கம்
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.மேலும் இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுந்தரா, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மேற்கு மண்டல தொழில் துறையினர் சந்திக்கும் சவால்கள், தொழில்துறை வளர்ச்சி காண நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல்வேறு தொழில் துறை அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.தொழில்துறைக்கான சாலை விரிவாக்கம், நெடுஞ்சாலை கட்டமைப்பு, கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
சித்தூர் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை
இந்நிகழ்வில், சிறப்புரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, ”கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதிக்கு சாலை கட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பவை. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசாங்கமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளர்ச்சி பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகமாகும்.