கோயம்புத்தூர்: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தொழிலதிபர் கருப்பையா. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு, செங்கல்பட்டில் சொந்தமாக இடம் உள்ளது. ஆனால் இந்த இடத்தில் நிலப்பிரச்னை இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக கோயம்புத்தூரில் உள்ள இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணைத் தலைவர் பிரசன்ன சுவாமிகள் என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது தனக்கு தெரிந்தவர்கள் மூலம் இந்த நில பிரச்சனையை சரி செய்து தருவதாகக் கூறிய பிரசன்ன சுவாமிகள், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 25,59,000 ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார். மேலும் மாங்கல்ய பூஜை செய்தால் விரைவில் பிரச்சனை தீரும் என கூறியதால், தொழிலதிபர் கருப்பையா தனது மனைவியின் 15 சவரன் தங்க நகையையும் கொடுத்துள்ளார்.
ஆனால் நிலப்பிரச்னையை தீர்த்து வைக்காததால், இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் கருப்பையா புகார் அளித்தார். இதனையடுத்து பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரபிரசாத் மற்றும் பிரகாஷ் ஆகிய நான்கு பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.