தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் கல்வியா? ஸ்மார்ட்போன், டிவியில்லாத நாங்கள் என்ன செய்வது? பழங்குடியின மாணவர்கள்! - பள்ளிக் கல்வித் துறை ஆன்லைன் வகுப்புகள்

கோயம்புத்தூர்: ஸ்மார்ட்போன், டிவி, மின்சாரம் இல்லாத பழங்குடியின மாணவர்கள் ஆன்லைன் கல்வி எப்படி கற்பார்கள். ஊரடங்கில் கேள்விக்குரியான பழங்குடியின மாணவர்களின் எதிர்காலம். அதுகுறித்த சிறப்புத்தொகுப்பு.

indigenous-students-difficulties-on-online-education
indigenous-students-difficulties-on-online-education

By

Published : Jul 26, 2020, 6:13 AM IST

Updated : Jul 31, 2020, 2:58 PM IST

கரோனா ஊரடங்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது. எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது. ஊரடங்கால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நான்கு மாதங்களுக்கு முன் பள்ளி மாணவர்களை டிவி பார்க்க அனுமதிக்காத பெற்றோர் தற்போது டிவி முன் அவர்களை அமர்த்தி டீ போட்டு கொடுத்து பாடம் கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏனென்றால் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைனில் மாற்றப்பட்டுவிட்டன. கரோனா ஊரடங்கால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக ஜூலை 13ஆம் தேதியிலிருந்து தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 7 மணி வரை 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்துவருகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள லேப் டாப்பில் ஆகஸ்ட் மாதம் வரையிலான பாடங்களை பென் ட்ரைவில் பதிவேற்றம் செய்துகொடுத்துள்ளனர்.

ஆனால் மின்சார வசதியே இன்னும் கிடைக்காத பழங்குடியின மாணவர்களின் நிலை குறித்து யார் சிந்திப்பது. இன்றைய காலம் குழப்பமானது, எப்படி என்றால் குழந்தை பிறந்தால் ஸ்மார்ட்போன் செஃல்பி, படம் வரைய ஐ.பாட் என குழந்தைகளை டெக்னாலஜியுடன் வளர்க்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், மின்சாரமே இல்லாத பழங்குடியின பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்த்து வருகின்றனர்.

அப்படி ஒரு பழங்குடியினத்தின் கதை பின்வருமாறு: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அருகில் அன்பு நகர் மற்றும் எல்லப்ப காலனி உள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலசர், இரவலர் இனப் பழங்குடியின மக்கள் 40 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆழியாறு அணை கட்ட தங்களது விளை நிலங்களை அரசுக்கு தாரைவார்த்த அந்த பழங்குடியினருக்கு அரசு உரிய நிலம் ஒதுக்கவில்லை.

அதனால் அவர்கள் பொதுப்பணித்துறைக்கு சொந்த மான நிலத்தில் குடிசைகள் அமைத்து வசித்துவருகின்றனர். இதுவரை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மின்சாரம் போய் சேரவில்லை. பள்ளிக்கூடம் திறந்திருக்கும் போதே மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்த மாணவர்களுக்கு, ஆன்லைன் கல்வி எப்படி கைகொடுக்கும்.

அன்பு நகர் மற்றும் எல்லப்ப நகரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10, 11ஆம் வகுப்பும், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 9 வரை ஆழியாறு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். தினமும் பள்ளிக்குச் சென்று படித்துவந்த அவர்களுக்கு கரோனா ஊரடங்கு பெரும் பாதகம் விளைவித்துவிட்டது. புத்தகத்தை தவிர டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவை குறித்து அறியாத அப்பகுதி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ஆன்லைன் கல்வியை எப்படி உறுதி செய்ய முடியும்.

ஆன்லைன் கல்வியில் பழங்குடி மாணவர்கள்

ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி இரண்டு வாரங்களாகிவிட்டன. மின்சாரமில்லாத பகுதியில் அவர்கள் என்ன செய்வார்கள். ஒரு டிவியில் அனைத்து மாணவர்களும் படித்துக்கொள்ளலாம். ஆனால் டிவி வசதி கூட அவர்களிடம் இல்லை. இப்படி தமிழ்நாடு முழுவதும் மின்சார வசதியின்றி பல்லாயிரக்கணக்கான மலை கிராம மாணவர்கள் தவித்துவருகின்றனர்.

அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கானல் நீராக போய்விட்டது. அதற்கு சாட்சியாகயிருக்கிறது அன்பு நகர், எல்லப்ப நகர் மாணவர்களின் நிலை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்க ஆன்லைன், டிவி, லேப்டாப் என திட்டமிடும் வேளையில், மின்சாரமேயில்லாத பகுதியில் வாழும் மலைகிராம மாணவர்களைப் பற்றியும் சிந்தித்திருக்கலாம். அவர்களுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? பழங்குடியின மாணவர்களின் எதிர்காலம் என்னாவது? என பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.

இதையும் படிங்க:மலைவாழ் சிறுவர்கள் கல்வி பயில உந்துதலாக நிற்கும் ஆசிரியை

Last Updated : Jul 31, 2020, 2:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details