கோவை: தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சியில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அமைதி பேரணி மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து பேரணி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். மேலும் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது,”இந்தியாவில் பஞ்சு கிடைக்காத காரணத்தினால் நூல் விலை உயர்ந்தது தற்போது அதிக விலை கொடுத்து நூலை உற்பத்தி செய்த பிறகு நூல் விலை வீழ்ச்சியடைந்து விட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் நெசவுப் பொருளாதாரம், ஜவுளி தொழில் அடியோடு வீழ்ந்துவிட்டது. இதற்கு மோடியின் தவறான பொருளாதார கொள்கையே காரணம்.
இந்தியாவில் பஞ்சை ஏற்றுமதி செய்யலாம் என்று கூறினார்கள், பஞ்சு மார்க்கெட் என்பது விவசாயிகள் கையில் இல்லை மாறாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் தான் உள்ளது. அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகள் பஞ்சை வாங்கி பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த பிறகு அரசு ஏற்றுமதிக்கு உத்தரவிட்டது. ஏற்றுமதியில் அதிக லாபம் கிடைப்பதால் ஏராளமான பஞ்சை ஏற்றுமதி செய்துவிட்டார்கள். அதன் விளைவு உள்நாட்டில் பஞ்சு கிடைக்காத நிலை ஏற்பட்டுவிட்டது.