கோயம்புத்தூர்:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் திருவண்ணாமலையில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் அவருக்குச் சொந்தமான கல்லூரிகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று (நவ. 3) காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையிலும் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. கோவை ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அதேபகுதியில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீ ராமின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 3 கார்களில் வந்துள்ள 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் சிங்காநல்லூர் பகுதியில் திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி இல்லத்தில் 4 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருவதாகவும், மீனா ஜெயக்குமார் மற்றும் எஸ்.எம்.சாமி ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளர்கள் என்பதுடன், ரியல் எஸ்டேட் தொழிலிலும் தொடர்புடையவர்களாக இருந்து வருவதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.