கோயம்புத்தூர்:பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் பிருந்தா உத்தரவுப்படி பொள்ளாச்சியிலிருந்து குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் கேரளாவுக்கு கடத்துவதைத் தடுக்கும் விதமாக போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட இரவு ரோந்து பணியில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார், SSI மலைக்கனி ஆகியோர் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் பேருந்தில் அதிகாலை 4.00 மணிக்குச் சோதனை செய்தனர். அதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த முகம்மது அப்துல்லாவைச் சோதனை செய்த போது முறையான ஆவணமின்றி ரூ.15 லட்சம் பணம் கேரளாவுக்குக் கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் ஆபீஸ் உரிமையாளர் பஷீர் ரூ.15 லட்சம் பணத்தை தன்னிடம் கொடுத்து கேரள மாநிலம் திரூர் பேருந்து நிலையம் சென்று பைசல் என்பவரிடம் கொடுப்பதற்காகக் கொண்டு செல்வதாக போலீசார் விசாரணையில் தெரிவித்தார்.
பின்னர் மேற்கு காவல் நிலைய போலீசார் முகம்மது அப்துல்லாவிடம் பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என இது குறித்து விசாரணை செய்தனர். மேலும் முகம்மது அப்துல்லாவையும் அவரிடம் பறிமுதல் செய்த ரூ.15 லட்சத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு கெடு விதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி!