கோவை:G20 மாநாட்டின் ஒரு பகுதியாக ’CIVIL 20 SUMMIT’ என்ற பெயரில் தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான கருத்தரங்கம் கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேரடியாகவும், காணொளி காட்சி மூலமாகவும் கலந்து கொண்டு தொழில் நுட்ப பாதுகாப்பு குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சுற்றுச்சூழல் சார்ந்து சர்வதேச அளவில் பல்வேறு பிரச்னைகளும் சவால்களும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலநிலை மாற்றம் பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இவற்றோடு ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாம் கண்டு வருகிறோம் எனத் தெரிவித்தார். எந்த ஒரு தொழில்நுட்பத்திற்கும் நன்மை, தீமை என இரண்டு பக்கங்களும் உண்டு எனத் தெரிவித்த அவர், இந்தியா ஜி-20 மாநாட்டை நடத்தும் இந்த வேளையில், உலக அளவிலான கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களது கருத்துக்களை பெறும் வகையிலும் சிவில் 20 எனும் இது போன்ற மாநாடு நடத்தப்படுகிறது எனத் தெரிவித்தார்.
உலக அளவிலான பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காணும் வகையில், இம்மாநாடு நடத்தப்படுகிறது எனத் தெரிவித்தார். இந்த உலகில் உள்ள அனைவரும் அனைத்து உயிரினங்களும் ஒரே குடும்பம் என்கிற மேம்பட்ட சிந்தனையை நமது கலாசாரம் முன் நிறுத்தி வந்துள்ளது எனவும் தெரிவித்தார். 1947ஆம் ஆண்டு ரிஷி அரவிந்தரும் இதையே கூறினார் என்றார்.
தமிழில் இதை யாதும் ஊரே யாவரும் கேளீர் என குறிப்பிடுகிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு பல்வேறு கொள்கைகள் முன் நிறுத்தப்பட்டன. அவை அனைத்தும் தாம் தான் சிறந்தவை எனக் கூறப்பட்டது. ஆனால் நமது ரிஷிகள் இந்த உலகில் உள்ள மனிதர்கள் மட்டுமின்றி செடி, கொடி, விலங்கினம் என அனைத்தும் ஒரே குடும்பம் எனக் கூறியுள்ளனர்.
’இதன் அடிப்படையிலேயே இப்போது உலகின் வழிகாட்டியாக இந்தியா திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் சுமார் 150 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இது 'வாசுதேவ குடும்பம்' எனும் இந்தியாவின் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. தடுப்பூசியை வியாபாரம் ஆக்காமல் உயிர்களைக் காப்பாற்ற இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இதற்கு முந்தைய அரசாங்கங்கள் அரசு சார்ந்த வளர்ச்சி எனும் முறையைப் பின்பற்றி ஆட்சி செய்து வந்தன எனவும், இதனால் மருத்துவம், கல்வி, வறுமை ஆகியவற்றைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் மக்களை மையமாகக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதனால் மருத்துவம், கல்வி, பெண் பாதுகாப்பு அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், எரிவாயு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றோடு வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பிரச்னைகளுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதும் டிஜிட்டல் மயம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார்.