கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பல்கலைக்கழக கூட்டமைப்பு சார்பாக நடந்த தென்மண்டல துணைவேந்தர்கள் கூட்டத்தை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார்.
பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், ''நிகழ்ச்சிக்கு வந்துள்ள துணைவேந்தர்கள் கல்வியில் தேர்ந்தவர்கள். கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை; அதே வேளையில் அது தேசிய அளவில் நன்மை கொடுப்பதாக இருக்க வேண்டும். அதனால், நாம் அனைவரும் உயர் கல்வியை மாற்றி அமைக்கப் பாடுபட வேண்டும். இந்திய நாட்டிற்கு நமது பார்வை என்ன என்பதைப் புரியவைக்க வேண்டும்.
மக்களின் பிரச்னை அரசுக்கும்தான்
இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுமார் 65 ஆண்டுகளாக தான் இந்தியா என அழைக்கிறோம். இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்களுக்கு நாம் வெறும் நிலமாக இருந்தோம்.
அரசுகள் 5ஆண்டுகள் தான் இருக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நிதி ஒதுக்குகிறார்கள். அது அடுத்த 3ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. அதன் பின்னர், இலவசங்களை நோக்கி அரசுகள் நகர்ந்து விடுகிறது.
அரசுகள் மாறினாலும் மக்களின் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகளாகவே இருக்கின்றன. 5ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுவதால் முழுப்பலனும் கிடைப்பதில்லை. இதனால், மாநிலங்களுக்கு இடையே சமநிலை இருப்பதில்லை.