கோயம்புத்தூர்:மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கிய படம் வட்டார வழக்கு. இதில் நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், நடிகை ரவீனா ரவி உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
கதை:80 காலகட்டத்தில் மதுரை மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கிடையேயான பகைதான் வட்டார வழக்கு படத்தின் கதை. இந்த பகையுணர்வு இரண்டு குடும்பங்களில் உள்ள பலரையும் காவு வாங்குகிறது. இதற்கிடையே காதல் மலருகிறது, இறுதியில் பகை வென்றதா அல்லது காதல் வென்றதா என்பதே படத்தின் கருவாகும். கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை ப்ராட்வேஸ் சினிமாஸில் ரசிகர்களைச் சந்தித்த, வட்டார வழக்கு திரைப்பட குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது படத்தின் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் பேசுகையில் “இத்திரைப்படம் 1985-ல் நடப்பது போன்ற கதைக் களத்தைக் கொண்டது.
இதில்,யாரும் செருப்பு அணிந்திடாத ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் ‘வட்டார வழக்கு’ என்று தலைப்பு வைத்துள்ளதாகத் தெரிவித்தார். மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி உள்ள படமாகக் கிராமத்துப் பின்னணியில் இருப்பதால், இசைஞானியை அணுகியதாகக் குறிப்பிட்ட அவர்,இந்த படத்தில் அவரது இசைதான் ஹீரோ என்றார்.