தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு உதவி கிடைத்தால் பதக்கம் நிச்சயம் - யோகா வீராங்கனை வைஷ்ணவி - அரசு உதவி கிடைத்தால் நிச்சயம் பதக்கம் வெல்வேன்

அரசு உதவி கிடைத்தால் ஒலிம்பிக்ஸ் போன்ற போட்டிகளில் நிச்சயம் பதக்கங்கள் வெல்வேன் எனக் கோவையைச் சேர்ந்த யோகா வீராங்கனை வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.

யோகா பயிற்சி மையத்தில் வைஷ்ணவியுடன் சிறுவர், சிறுமிகள்
யோகா பயிற்சி மையத்தில் வைஷ்ணவியுடன் சிறுவர், சிறுமிகள்

By

Published : Mar 3, 2022, 7:04 AM IST

கோயம்புத்தூர்: இளங்கலை காட்சி ஊடகவியலில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி வைஷ்ணவி (18) யோகா வீராங்கனை ஆவார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தேசிய, சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். யோகாவில் திறமையானவர்களைக் கண்டறிந்து வெளிக் கொண்டு வர எண்ணிய வைஷ்ணவி, தனது தந்தையின் உதவியுடன் கருமத்தம்பட்டியில் யோகா பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

அதில் சுமார் 30 சிறுவர், சிறுமிகளுக்கு வைஷ்ணவி யோகா பயிற்றுவித்து வருகிறார். அவரிடம் யோகா பயின்றுவரும் 5 பேர் செய்த யோகாசனங்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

யோகா பயிற்சி மையத்தில் வைஷ்ணவியுடன் சிறுவர், சிறுமிகள்

இதுகுறித்து யோகா வீராங்கனை வைஷ்ணவி கூறுகையில், "சிறுவயது முதலே, யோகா மீதான ஈடுபாடு காரணமாக, அக்கலையை கற்றுக் கொண்டேன். தேசிய, சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளேன். 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை யோகாவில் எனது 4 சாதனைகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. தற்போது 18 நிமிடங்கள் நான் தொடர்ச்சியாக சக்கராசனம் செய்தது, 5 ஆவது முறையாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

அஷ்ட வக்ராசனம்

என்னிடம் யோகா பயிலும் பவ்ய ஸ்ரீ, அஷ்ட வக்ராசனத்தை 8 கோணங்களில் 2 நிமிடம் 6 விநாடிகளில் செய்தும், பூவேஷ், உபவிஷ்ட கோனாசனத்தில் 10 மீட்டாரை 10 விநாடிகளிலும் கடந்தும் வெற்றி பெற்றுள்ளனர். இதைப் பெண்களுக்கான பிரிவில் கனிஷ்மா, 9 வினாடிகளில் செய்துக் காட்டியுள்ளார்.

இதேபோல் சக்தி சஞ்சனா, கூர்மாசனத்தை 41 வினாடிகளில் செய்துக் காட்டியுள்ளார். சித்தேஷ், சக்கராசனத்தில் ஒரு நிமிடத்தில் 85 முட்டைகளை உடைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

நிச்சயம் பதக்கங்கள் வெல்வோம்

யோகா பயிற்சி தற்போது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், யோகா பயிலும் வீரர்களுக்கு அரசு உதவி கிடைத்தால் கேலோ இந்தியா, ஒலிம்பிக்ஸ் போன்ற போட்டிகளில் நிச்சயம் பதக்கங்கள் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். இதுகுறித்து சக்தி சஞ்சனா கூறுகையில், "எனக்கு டான்சில் பிரச்சனை இருந்த நிலையில் யோகா மேற்கொண்ட நிலையில், அந்த பிரச்சனை சரியாகி உள்ளது. யோகா செய்யும் போது மனதை ஒருநிலைப்படுத்துதல் காரணமாகப் படிப்பில் முழு கவனம் செலுத்த முடிகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details