கோயம்புத்தூர்: சிவக்குமார் (41). இவரது மனைவி கவிதா (37). இந்த தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக மனைவி கவிதா தனது கணவர் மீது புகார் தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம் 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (மார்ச் 23) வழக்கு விசாரணைக்காக கணவன் மனைவி இருவரும் வந்திருந்த நிலையில் இருவரும் காத்திருப்பாளார்கள் பகுதியில் காத்திருந்துள்ளனர். அப்போது சிவக்குமார் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதாவின் மீது வீசியுள்ளார். அது கவிதாவின் உடலில் பட்டது. உடனடியாக அருகில் இருந்த வழக்கறிஞர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதனிடையே சிவக்குமாரை அருகில் இருந்த பிற வழக்கறிஞர்கள் தாக்க முற்பட்டனர்.
இதற்கிடையே அங்கிருந்த காவலர்கள் சிவக்குமாரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே இது போன்று துணிச்சலுடன் வந்து ஆசிட் வீசிய நபரை ஏதற்காக பாதுகாப்பு கொடுத்து அழைத்து சொல்கிறீர்கள் என காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு சிவக்குமாரை தாக்க முற்பட்டனர்.
இருப்பினும் காவல் துறையினர் சிவக்குமாரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பாதுகாப்பு வழங்கி காவல் துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ் ஆய்வு மேற்கொண்டார்.