காதல் மனைவி மூன்றாம் நாள் பிரிவு: காதல் கணவர் தற்கொலை - காதல் திருமணம்
கோயம்புத்தூர்: திருமணமாகி மூன்றாம் நாள் காதல் மனைவி பிரிந்து சென்றதால், கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கோயம்புத்தூர் தென்கரைப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (எ) கார்த்திக்(29). இவரும் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள மஞ்சுளா தேவி(20) ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி காதல் திருமணம் செய்தனர்.
திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதிக்காத நிலையில், மணமகன் வீட்டார் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இருவரும் கார்த்திக் வீட்டிலேயே தங்கி இருந்த நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி மஞ்சுளா தேவியின் உறவினரான பாலசுப்ரமணியன் அவரது மனைவி ராஜேஸ்வரி, மஞ்சுளா தேவியின் அம்மா சுசிலா ஆகிய மூவரும் கார்த்திக் வீட்டிற்குச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
செப்டம்பர் 7ஆம் தேதி பாலசுப்ரமணியன், கார்த்திக் - மஞ்சுளா தேவியை தொலைபேசியில் அழைத்து இனிமேல் எங்கள் வீட்டிற்கும் உங்கள் வீட்டுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று காவல் நிலையம் வந்து எழுதித் தருமாறும் அழைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கார்த்திக் - மஞ்சுளாதேவி ஆகிய இருவரும் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, காவல் நிலையத்தில் மஞ்சுளா தேவியை பெண்வீட்டார் தனியாக அழைத்துப் பேசியுள்ளனர்.
அதன்பின் மஞ்சுளா தேவி, கார்த்திக்கிடம் 'இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று கூறி; 'தனக்கு பெற்றோர் தான் அவசியம்' என்று சென்றுள்ளார்.
செப்டம்பர் 8ஆம் தேதி பாலசுப்ரமணியன் கார்த்திக்கின் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டி, "இனி நீ உயிரோடு இருந்தால் என் மகளுக்கு தொந்தரவு. நீ செத்துப் போ" என்று கூறியதாகத் தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த கார்த்திக் செப்டம்பர் 9ஆம் தேதி அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் பெண் வீட்டார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கார்த்திக் வீட்டார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் அவர்களிடம் ஒரு புகார் மனு அளிக்குமாறு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். அதனை அடுத்து அவர்கள் அளித்த புகார் மனுவில், 'கார்த்திக்கின் மரணத்திற்குக் காரணம் பெண் வீட்டாரான பாலசுப்ரமணியன், ராஜேஸ்வரி, சுசிலா ஆகிய மூவரும் தான். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போத்தனூர் காவல் துறையினரும் ஒரு காரணம்' என்றும் குறிப்பிட்டிருந்தனர்.