கோயம்புத்தூர்: பாப்பநாயக்கன் பாளையத்தில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், “சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சாரக் கட்டணம் உயர்வினால் தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். 30 வகையான மின் கட்டண உயர்வை ஏற்படுத்தி உள்ளனர்.
அதில், நாங்கள் முன் வைப்பது 5 வகையான கட்டணக் குறைவுக்கான கோரிக்கை தான். இது குறித்து முதலமைச்சரிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். 430% நிலைக் கட்டணத்திற்கு (மாதாந்திரக் கட்டணம்) கட்டணம் உயர்த்தி உள்ளனர். இதனால் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம். நகை, நட்டல்லாம் வைத்து மின் கட்டணம் செலுத்தும் அளவிற்குத் தொழில் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
118 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம். தந்தி அனுப்புவது, கடை அடைப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் சந்திப்பு என தொடர்ச்சியாகப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். தொழில் நிறுவனங்களின் மேற்கூரைகளில் சோலர் போர்டு அமைப்பதற்கு 1.53 காசு என மின்வாரியம் எங்களிடம் வசூல் செய்து வருகின்றனர்.
ஆனால், பிற மாநிலங்களில் 50% அரசு ஏற்றுக் கொள்கிறது. இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(டிச.27) தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்”.
தொடர்ந்து பேசிய அவர், “தொழில்துறையினர் அரசியலுக்கு அப்பாற்பட்டு வேலை பார்த்து வருகிறோம். எங்கள் பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமே தவிர, இதை அரசியலாக்க வேண்டாம். வாழ்வாதாரப் பிரச்னையாக மின் கட்டணம் உயர்வு உள்ளது. இதை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.