கோவை மாவட்டத்திலுள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களையும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களையும் பாராட்டி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தினர், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் முன்னிலையில் வேட்டி, சேலைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில், தூய்மைப் பணியில் ஈடுபடும் 85 பெண்களுக்கு சேலையும், 85 ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், நபர் ஒன்றுக்கு 10 கிலோ அளவிலான காய்கறிகள், சோப்புகள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினர்.
முன்னதாக, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சார்பில் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் முகக்கவசங்கள், மருத்துவர் பாதுகாப்பு உடைகள், தானியங்கி கிருமி நாசினி இயந்திரம், கிருமி நாசினிப் பொருட்கள் ஆகியவை கரோனா முன்களப் போராளிகளான காவல் துறையினர், மருத்துவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
மேலும், இதுகுறித்துப் பேசிய இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர் நிர்மலா, மூன்றாயிரத்து 500 நோயாளிகள் இதுவரை சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர் என்றும் தற்போது 350 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்தார். இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தூய்மைப் பணியாளர்களை கெளரவப்படுத்துவது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.