கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் உள்ள வடசித்தூர், செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நாளை 'மயிலந்தீபாவளி' என்று அழைக்கிறார்கள். இந்த கிராமத்தில் இந்துக்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் குடும்பத்தினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் உறவினர்கள் போல் பழகி வருவதால் ஆண்டு தோறும் மயிலந்தீபாவளியில் முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா முழுவதும் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் அதவாது நேற்று 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வடசித்தூர், செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம், ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மயிலந்தீபாவளியை கொண்டாடினார்கள்.