கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வருகிறது. அங்கு கொட்டப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பைக்கிடங்கில் பல ஆயிரம் டன் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று (மார்ச் 24) மாலை திடீரென இந்தக் குப்பை கிடங்கில் தீப்பிடித்தது.
இதனைத்தொடர்ந்து குப்பைக் கிடங்கு முழுவதும் பரவிய தீ விடிய விடிய கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்தப் பகுதியே புகை மூட்டமாக காட்சியளிப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களும், குழந்தைகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்துமாறு தீயணைப்பு வீரர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினர்.