கோவை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 140 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என நிரூபித்தது. இதற்கு காரணம் திமுகவில் நிலவிய கோஷ்டி பூசல் மற்றும் அதிமுகவினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டதால் திமுக தோல்வியை தழுவியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கோவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் மாவட்டத்திற்கு என அமைச்சர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களை கண்காணிக்கவும், கரோனாவைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் ராமசந்திரன், சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் பொறுப்பு அமைச்சர்களாகப் நியமிக்கப்பட்ட ராமசந்திரன், சக்கரபாணி மீது ஏராளமான புகார்கள் எழுந்தன. அதே சமயம் கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி அசைக்க முடியாத இடத்தில் இருந்ததால், கோவைக்கு தனிக்கவனம் செலுத்த முடிந்தது. அதே மாதிரியான நபர் இருந்தால்தான் கோவையில் திமுக வெற்றி பெற முடியும். அதற்கு செந்தில் பாலாஜி மாதிரியான ஆளுமைமிக்க நபர்களால் மட்டுமே வேலுமணியையும் எதிர்த்து அரசியல் செய்து, கட்சியை வளர்க்க முடியும் என நினைத்த முதலமைச்சர் ஸ்டாலின் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்தார்.
இதனை தொடர்ந்து அவரின் வருகை கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்தது. எதை எடுத்தாலும் பிரம்மாண்டம், தோல்வியே இல்லை என்ற நிலையை செந்தில்பாலாஜி ஏற்படுத்தினார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் வந்து இணைய ஆரம்பித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வைத்து பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்தி கோவையை திக்குமுக்காட வைத்தார் செந்தில்பாலாஜி.
அதே போன்று உள்ளாட்சி தேர்தலில் அவர் மேற்கொண்ட அனைத்து யுக்திகளும் வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்திலும் திமுக கைப்பற்றியது. இரண்டு பேரூராட்சிகள் மட்டுமே திமுகவை கைவிட்டது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுகவினர் கதாநாயகனாகவே பார்த்தனர். அதே சமயம் அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் இருந்து கோவை வந்துள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையை உள்ளூர் திமுகவினருக்கு தரப்படவில்லை என்ற அதிருப்தியில் திமுகவினர் உள்ளனர்.
செந்தில் பாலாஜி வருகைக்கு முன்பு, ஒவ்வொரு டாஸ்மாக் மூலமாக மாதம் சுமார் 50,000 வந்து கொண்டிருந்தது. மாவட்ட செயலாளர்கள் அதை அவர்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகளுக்கு பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி வருகைக்கு பிறகு, அந்தப் பணம் கரூர் கட்சிகாரர்களுக்கு தான் செல்கிறது என உள்ளூர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவை நிர்வாகிகளிடம் எதுவுமே அவர் பேசுவதில்லை. நாங்கள் கொடுக்கும் நியாயமான கோரிக்கைகளை கூட அவர் கண்டுகொள்வதில்லை. டாஸ்மாக் பார்கள் செந்தில் பாலாஜியின் கரூர் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல ஒரு நிகழ்ச்சி நடந்தால், மைக் செட் முதல் பணம் கொடுப்பது வரை எல்லாமே கரூர்காரர்கள் தான் செய்கின்றனர். கட்சிக்காக காலம் காலமாக உழைத்த எங்களை கண்டுகொள்ளவில்லை என தெரிவித்தனர்.