கேரளாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கோவையில் இருந்து கேரளாவுக்குச் செல்பவர்கள் முறையாக அனுமதி பெற்று வருகிறார்களா என காவல் துறையினரும், வருவாய் துறையினரும் கண்காணித்துவருகின்றனர்.
பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவசர தேவைக்கு மட்டுமே இ- பாஸ் வழங்கப்பட்டு கேரள மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லக்கூடிய சரக்கு வாகனங்கள் எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி இயக்கப்படுகின்றன.
சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால் இங்கு கடந்த சில நாள்களாக முறைகேடாக ஹவாலா பணம் கொண்டுசெல்வது தொடர்ந்துவருகிறது. இதனால் கோவையிலிருந்து வாளையாறு வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்குப் பிறகே கேரள மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று (ஜூலை 14) காலை கோவையில் இருந்து சென்ற மினி டெம்போவை சந்தேகத்தின் பெயரில் பாலக்காடு காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தபோது பனியன் வேஸ்டிகளுக்கிடையே அரசால் தடை செய்யப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதனைக் கொண்டு சென்ற கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜைன்னுலாபுதின் என்பவரை கைது செய்த காவல் துறையினர், குட்கா பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இந்த குட்கா பொருள் எங்கிருந்து யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது, மேலும் இதனுடன் ஹவாலா பணம் ஏதாவது கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தொடர்ச்சியாக ஹவாலா பணம் சிக்கிய நிலையில் தற்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருள் சிக்கியுள்ளதால் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவில் நுழையக்கூடிய அனைத்து விதமான வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க... ரூ. 42 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல்