கோயம்புத்தூர்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ் (வயது 49). இவர் ஹோமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை போத்தனூர் வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டை கடந்த 45 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.
இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோலபறம்பு போலீசார் கொள்ளை வழக்கு தொடர்பாக திருப்பூரில் வைத்து எர்வினை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் இது குறித்து கேரள மாநில போலீசார் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் மேலும் ஒரு பாதிரியார் கைது.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?
இதனை தொடர்ந்து இரு மாநில போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையின் போது வீட்டில் இருந்த போலி தங்க கட்டிகள் மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவர் என அச்சிடப்பட்ட 3 ரப்பர் ஸ்டாம்பு, ஏர்கன் துப்பாக்கி, வீட்டின் கதவை உடைக்கும் ஆயுதங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் ஏவின்ஸ் வாடகைக்கு வந்துள்ளதும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை காணவில்லை என தங்கராஜிடம் தெரிவித்துள்ளதும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: நேற்று சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் விருது; இன்று சைபர் கிரைம் போலீசாரால் கைது
மேலும் எர்வின் வீட்டின் உரிமையாளரிடம் அவர் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து வீட்டின் உரிமையாளர் தங்கராஜ் கூறுகையில், “வீட்டிற்கு எப்போது வருகிறார் எப்போது போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதே சமயம் கேரள போலீசார் அவரை கைது செய்ததும் தெரிய வந்தது” எனக் கூறினார்.
இதனிடையே எர்வின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள், துப்பாக்கி, ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? அவர் உண்மையிலேயே ஹோமியோபதி மருத்துவர் தானா? கோவையில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு உள்ளதா என கண்டறிய அவரை காவலில் எடுத்து விசாரிக்க போத்தனூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் குப்பைத்தொட்டியில் கைத்துப்பாக்கி கண்டெடுப்பு..! போலீசார் தீவிர விசாரணை