கோவை:தமிழ்நாட்டில் கரோனா பரவல் கணிசமாக குறைந்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைக்கு முன்னதாக அனுமதி வழங்கப்பட்டது. எனினும், தொற்று அதிகம் பாதித்த கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு தடை தொடர்ந்தது.
நகரப்பேருந்துகள்
இந்நிலையில், தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (ஜூலை 5) முதல் பொதுப் போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
கோவை மாநகர், பொள்ளாச்சி, அன்னூர், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பேருந்துநிலையங்களில் இருந்து 625 நகரப்பேருந்துகள், 840 வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் என மொத்தமாக 1,425 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பேருந்துகளில், முகக்கவசங்கள் அணிந்துவருபவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பயணம் முடிந்தவுடன் பேருந்தின் இருக்கைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.
வெளி மாவட்டப் பேருந்துகள்
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு காந்திபுரம் விரைவு பேருந்து நிலையத்தில் இருந்தும், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும், மதுரை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
வெளிமாநில பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்ந்துவரும் நிலையில், கேரள எல்லையான வளையார் வரையிலம், கர்நாடக எல்லையான ஓசூர் வரையிலும் செல்ல கோவையிலிருந்து அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனப் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:குமரியில் 70 % பேருந்துகள் இயக்கம்