கோவை ப்ரூக் பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு செயலாளர் மருத்துவர் ரவி குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தற்போது கரோனாவால் பல மருத்துவமனைகள் மூடப்படுகின்றன என்று ஊடகத்தினர் செய்தி ஒளிபரப்புவது வருத்தமளிக்கிறது. தமிழ்நாடு அரசு கூறியதன் பேரில்தான் மருத்துவமனைகள் மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை மூடப்படுகின்றன.
பல்வேறு தனியார் மருத்துவமனைகள் கரோனா பரிசோதனைக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பலரும் கூறுகின்றனர். இதற்குக் காரணம் தனியார் மருத்துவமனையைப் பொறுத்தவரை, சிகிச்சை பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், மருத்துவர், செவிலியர் அதிக சம்பளம் கொடுக்கும் நிலை நிர்வாகத்திற்கு உள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் பணம் வசூலிக்கப்படுகிறது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. இந்தத் தொகையை வசூலிப்பதற்கு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், அரசு ஒரு நாளைக்கு 7,500 ரூபாய் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நம்மை விட்டுப் போகாது.