கோவை:தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்திருப்பது வெட்கக்கேடு. தீபாவளிக்கு முந்தைய நாள், அடுத்த நாள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.கணபதி புதூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை
அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களை அவர், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறேன். பல்லடத்தில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன்.
விசைத்தறிகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பதால் பல்லடத்தில் மட்டும் 60 ஆயிரம் விசைத்தறிகள் மூடப்படும் நிலையில் உள்ளது. தமிழக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக விசைத்தறிகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். பண்டிகை காலமான தற்போது ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றனர்.
இதனைத் தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். மின் கட்டண பிரச்சனைக்குத் தீர்வாக மாதாந்திர மின்கட்டணம் கணக்கிட வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில் மாதம் தோறும் மின்கணக்கீடு என்றனர். ஆனால் அதை அமல்படுத்தவில்லை எனக் கூறினார். மேலும் அத்திகடவு - அவினாசி திட்டம் கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது என தெரிவித்த அவர், கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் நடக்கவில்லை எனவும், இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்த மக்களின் நீண்ட கால கோரிக்கையான பாண்டியாறு புன்னம்புழா, ஆனைமலை நல்லாறு திட்டம் ஆகியவற்றை கேரள அரசிடம் பேசி திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கூறினார். நீர் பாசனத் திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
விவசாயத்தில் லாபம் இல்லாததால் விவசாய நிலங்களை மனைகளாக விற்கும் நிலை இருக்கிறது எனவும் கூறினார். கூடுதல் அணைகளைக் கட்டுவதுடன், பவானி அணையின் கொள்ளவை அதிகப்படுத்த வேண்டும் எனவும், சென்னையில் புதிதாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும் என்றார்.
கோவை மண்டலம் மிகப்பெரிய சொத்து. இதை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் எனவும், பஞ்சுக்கும் ஜி.எஸ்.டி, நூலுக்கும் ஜி.எஸ்.டி, தயாரிக்கப்பட்ட துணிக்கும் ஜி.எஸ்.டி என விதிக்கப்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் என்பது மாநில உரிமைக்கு எதிரானது என கூறிய அவர் இன்றைய சூழலில் இது பொருந்தாது எனவும் தெரிவித்தார்.
22 அலுவல் மொழிகளில் ஒன்று இந்தி எனக் கூறிய அவர் ஏன் இந்தியைத் திணிக்க வேண்டும், இந்தி அவசியம் என்றால் கற்றுக்கொள்வார்கள் திணிக்கக் கூடாது எனத் தெரிவித்தார். மத்திய அரசு பல வகைகளில் இந்தி திணிப்பைச் செய்ய முயல்வதாகக் கூறிய அவர் இந்தியைத் திணிக்கும் முயற்சியை கை விடுங்கள் என்றார்.