கோயம்புத்தூர்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோவை மாவட்டம் சார்பில், சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பணிக் காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்குதல், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு நிகழ்ச்சி, கோவை மாவட்ட பணிமனை அளவில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 27 பேருக்கு வாரிசு பணி ஆணை, மருதமலை, சுங்கம் 1, சுங்கம் 2 ஆகிய மூன்று கிளைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை, 50க்கும் மேற்பட்ட பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் சிவசங்கர், கோவையில் மட்டும் போக்குவரத்துத் துறையில் பாதிக்கப்பட்ட 550 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 145 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆட்சி காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆட்சிக்காலத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை முடிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து மிகச் சிறப்பான ஒரு திட்டம் எனவும், தற்போது இந்த திட்டத்திற்கு ‘விடியல் பயணம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறிய அவர், இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே மிகப்பெரிய துறையாக போக்குவரத்து துறை உள்ளது என கூறிய அவர், அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கும் பணியாளர்களை எடுக்க உள்ளதாகவும், அதற்கான அரசாணையை முதல்வர் அண்மையில் வெளியிட்டிருந்தார் எனவும் தெரிவித்தார்.
புதிய பணியாளர்களை பணிக்கு எடுக்கும்போது போக்குவரத்து துறை மீண்டும் மறுமலர்ச்சி காண உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், புதிதாக பணிக்கு வருபவர்கள் வேலைக்கு வரும்போது என்ன ஆர்வத்தில் வந்தீர்களோ, அதே ஆர்வத்தில் பணிபுரிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு சமச்சீரான வளர்ச்சியை பெற்றுள்ளது என கூறிய அவர், போக்குவரத்து துறையினால்தான் அனைவரும் நகரத்திற்கு சென்று படிப்பை பெற்றுள்ளார்கள்” என தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், “பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் என்பது ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயரில் சிறப்பாக நடைபெறுகிறது. 40 சதவீதமாக இருந்த பெண்கள் பயணம், 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாள்தோறும் 48 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பேருந்து திட்டம் மூலம் பயணம் செய்கின்றனர். இத்திட்டத்திற்கு முதலமைச்சர் வழங்கிய நிதி, போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படவும் பயன்படுகிறது.
தொழிலாளர்கள் பற்றாக்குறையை நீக்க புதிய பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்சி பொறுப்பு ஏற்றபோது எவ்வளவு மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் ஓடியதோ, அதே எண்ணிக்கையில் தொடரும். கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படும்போது, நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும்.