கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வாய்கால்களை தூர்வார வேண்டும் எனவும், சாலைப் பணிகளை விரைந்து முடித்து சாலைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் மனு அளித்தார்.
இது குறித்து பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன், ''கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சரியான சாலை வசதி இல்லை. 24 மணி நேர குடிநீருக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளது. இதனால் 92வது வார்டு மைல்கல் பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் அரசு நகரப்பேருந்து ஒன்று அதில் சிக்கிக் கொண்டது.
அதேபோல், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். இது குறித்த மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளரும் இது குறித்து ஆவன செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பு தூர்வாரும் பணிகளை மேற்கொண்டால் தான் கோவை மக்கள் வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும்.