கோயம்புத்தூர்:திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நொய்யல் பெருவிழா நினைவு நிகழ்வு:அங்கு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நொய்யல் நதியை மீண்டும் புணர் நிர்மாணிக்க வேண்டும் என அடிகளாரும், சிறுதுளி அமைப்பினரும், தன்னார்வ அமைப்புகள் எல்லாம் ஒரு முகமாக நொய்யல் பெருவிழாவை நடத்தி வருகின்றனர். அதனுடைய நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருக்கிறேன். நீர் நிலைகளை காப்பாற்றாமல் நிலத்தை காப்பாற்ற முடியாது.
நீர் நிலைகளை காப்பாற்றாமல் சுற்றுப்புற சூழலை காப்பாற்ற முடியாது என்கிற அடிப்படையில் அவர்கள் எடுத்திருக்கிற பெரும் முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார். மேலும் மாநில அரசு மற்றும் ஆளுநருக்கு இடையேயான மோதல் போக்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், "இது யாருடைய தவறு என்பதை பார்க்க வேண்டும்.
ஆளுநரை விமர்சிப்பதை ஆளுங்கட்சியினர் கைவிட வேண்டும்:ஆளுநர்களை அரசியல் பக்கம் இழுக்கிறார்களா? அல்லது ஆளுநர்கள் அரசியல் பக்கம் சாய்கிறார்களா என்பது தான் கேள்வி. நீட்டைப் பொறுத்தவரை யார் கொண்டு வந்தார்கள் என்பது தெரியும். நீட் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது என்பதும் தெரியும். தேவையில்லாமல் ஆளுநரை விமர்சிக்கின்ற போக்கை ஆளுங்கட்சியினர் கைவிட வேண்டும். அப்போது தான் ஆளுநர்கள் அரசியலில் தலையிடுவது போன்ற சூழல் உருவாகாமல் இருக்கும்.
அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் ஆளுநரை குறை கூறுவதும் ஆளுநரை குறைத்து பேசுவதும் தான் தங்களுடைய அரசியல் என்ற புதிய போக்கை ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய மாநில அரசு கடைபிடிப்பது சரியான அணுகுமுறை அல்ல. மாநில அரசு இதனை விட்டுவிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்துகின்ற அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது.