சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக மதுரை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் கல் குவாரிகளை மீண்டும் இயக்குவது தொடர்பாக இன்று (மே 9) தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "இத்தாலியன் கிரானைட் என்று புகழ்பெற்ற மதுரை கிரானைட் கல் குவாரிகள் மூடப்பட்டு, இயங்காமல் இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு வேலை இழப்பு மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே மதுரை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள கிரானைட் கல் குவாரிகளை மீண்டும் இயக்குவது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய கனிம வளம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், "மதுரை மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் கிரானைட் குவாரி குறித்து செய்தித்தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில் அப்போதைய ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் ஏற்பட்டதாக அறிக்கை சமர்பித்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு கிரானைட் குவாரிகள் மற்றும் தனியார் கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த தயாராக உள்ளது. இது குறித்து விரைவில் வல்லுநர் குழு நியமிக்கப்படும். அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள குவாரிகளை அரசே ஏற்று நடத்த ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், தனியார் குவாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ள நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகள் மீண்டும் இயக்கப்படும், இதன் மூலம் அப்பகுதி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற கலைக்கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்துக்கொள்ள முடிவு - அமைச்சர் பொன்முடி!