சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “சிஏஏவுக்கு எதிரான இஸ்லாமியர் போராட்டம் தொடர்பாக நானும், வருவாய்த் துறை அமைச்சரும் சட்டப்பேரவையில் தெளிவாக கூறியுள்ளோம். இந்த அரசாங்கம் எப்போதுமே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு தரும் அரசாகவே இருக்கும், இஸ்லாமிய மக்கள் சிஏஏவைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடந்த 2001 ஆம் ஆண்டில் திமுக கூட்டணியில் இருந்த பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது என்.பி.ஆர் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், அது திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2010 ஆம் ஆண்டில் நடைமுறைபடுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் தான் கணக்கெடுப்பு தொடங்கியது. ஆனால் இன்று ஆட்சிக்கு இடையூறு செய்ய சிறுபான்மையினரிடத்தில் அச்சம் ஏற்படுத்த இத்தகைய தவறான செயலில் திமுகவினர் ஈடுபடுகின்றனர். அதேபோல் கடைசியாக 2011 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும் மத்திய அமைச்சர் சிஏஏ குறித்து இங்குள்ள இஸ்லாமியர்கள் தங்களிடம் உள்ள ஆதாரத்தைக் கொடுக்கலாம் என தெளிவுபடுத்தியுள்ளார். ஆனாலும் எதிர்கட்சியினர் சிறுபான்மையினரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்த இதனை பூதாகரமாக்கி அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.