கோவை: அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர் மார்ச் 16ஆம் தேதி மாணவி ஒருவரை தனது அறைக்கு அழைத்து குடும்பப் பிரச்சினை குறித்து கேட்டுள்ளார். அப்போது கண்களைப் பார்த்துப் பேசுமாறு மாணவியைத் தொட்டுப் பேசியுள்ளார்.
உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட மாணவி, பேராசிரியரை எச்சரித்துவிட்டு அறையிலிருந்து வெளியேறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற மூன்று நாள்கள் கழித்து, மாணவியிடம், அவரது வீடு வழியாகத் தான் வருவதாகவும், தன்னிடம் இருக்கும் செய்முறை நோட்டை பெற்றுக்கொள்ளும்படியும் பேராசிரியர் கூறியுள்ளார். இதனை நம்பி மாணவியும் நோட்டை வாங்க வந்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் இரட்டைப்பொருள் தரும் பேச்சு
அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டி மாணவியைக் காருக்குள் அமரச் செய்து, பேராசிரியர் ஆசைவார்த்தைகளைக் கூறியுள்ளார். உடனே மாணவி கூச்சலிடவே, அவரை காரிலிருந்து இறக்கி விட்டுவிட்டு, 'நீ கல்லூரி வரும்போது தூக்கிச் சென்று திருமணம் செய்துவிடுவேன்' எனப் பேராசிரியர் மிரட்டியுள்ளார். மேலும் இதனை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மாணவியை அவர் மிரட்டியுள்ளார்.
கரோனா காரணமாக அடைக்கப்பட்டிருந்த கல்லூரி திறக்கப்பட்ட பின்னர், தனக்கு நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, சக மாணவியிடம் தெரிவித்துள்ளார். அப்போது பேராசிரியர் மேலும் மூன்று மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் (sexual Harassment) ஈடுபட்டதும், வாட்ஸ்அப்பில் இரட்டைப் பொருள் தரும் சொற்களில் பேசியதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி பந்தய சாலை காவல் நிலையத்தில் பேராசிரியர் மீது புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பேராசிரியரைக் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க:காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஐவர் பலி, மூவர் படுகாயம்!