பொள்ளாச்சியில் இன்று அகில இந்திய மருத்துவர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மருத்துவ சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநில தலைவர் கனக சபாபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கொல்கத்தாவில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவர்களின் 24 மணி நேரம் வேலைநிறுத்தப் போராட்டம்!
பொள்ளாச்சி: கொல்கத்தா மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவ மையங்களில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது, அதற்கு தேசிய அளவில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டது.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் கனக சபாபதி கூறியதாவது, "நாளை (ஜூன் 17) காலை 6 மணி முதல் மறுநாள் (ஜூன் 18) காலை 6 மணி வரை மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும். பொதுமக்கள் நலன் கருதி அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைகள் மட்டும் நடைபெறும். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரசு, தனியார் மருத்துவர்களும், ஆறு ஆயிரத்து 500 தனியார் மருத்துவமனைகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்" என்று தெரிவித்தார்.